தீபாவளி பண்டிகை 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சமயத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக அளவு கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. இந்த வருடம் ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. ஆனால் கட்டண வசூலில் எந்தவித மாற்றமும் இல்லை அதிலும் குறிப்பாக சென்ற வருடத்தை விட இந்த வருடம் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவின் பெயரில் 9 குழுக்கள் ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம், போரூர், செங்குன்றம், செங்கல்பட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூடுதலாக கட்டணம் வசூலிப்பது பற்றி பயணிகள் புகார் தெரிவித்தால் அதனை திருப்பி தருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக அலுவலர்கள் பேசும்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது பற்றி இன்று முதல் தீவிரமாக கண்காணிக்கப்படும். தகுதி சான்று பெர்மிட் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து இருந்தால் பயணிகளிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிக கட்டணம் வசூலிப்பது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.