டெல்லியில் பஹங்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் மனோஜ் மஞ்சந்தா(45 வயது) என்பவர் அதிக சத்ததுடன் பாட்டு கேட்டதாக கூறப்படுகிறது. இது அங்கிருந்த சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் மனோஜிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மனோஜை அங்கிருந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு ஆத்திரமடைந்த மனோஜின் ஆதரவாளர்கள் அவர்களிடம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவ்வாறாக சண்டை முற்றிய நிலையில் அங்கிருந்த ஒரு நபர் மனோஜை கத்தியால் குத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த நிலையில் இரு தரப்பினரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மனோஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத்தொடர்ந்து மனோஜின் சகோதரர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.