Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிக வட்டி கொடுப்பதாக மோசடி செய்த “ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம்”…. 26 இடங்களில் அதிரடி சோதனை… ரூ 3 1/2 கோடி பறிமுதல்…!!!!

அதிக வட்டி கொடுப்பதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் 26 இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை அமைந்தகரையில் “ஆருத்ரா கோல்டு” என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.  இதன் கிளைகள் தமிழகத்தில் பல இடங்களில் அமைந்துள்ளன. இந்த நிறுவனம் தங்க நகைகள் மீது கடன் வழங்கியுள்ளது. மேலும் பொதுமக்களிடம் முதலீடு தொகையும் வசூலித்து வந்துள்ளது. ரூ ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுக்கப்படும் என்று கவர்ச்சியாக அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து இந்த அளவுக்கு வட்டி கொடுக்க முடியாது என்றும், இதில் மோசடி நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முறையாக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனால் இந்த நிறுவனத்தின் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள். பூர்வாங்க விசாரணைக்கு பின் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் திடீரென்று சென்னை தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் சோதனை மேற்கொண்டார்கள். அதன்படி செங்கல்பட்டில் 12 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் ரூமேஷ்குமாரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பின் திருவள்ளூரில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ ஒரு கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆலங்குடியில் இந்த நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பட்டாபிராமன் என்பவருடைய வீடு அமைந்துள்ளது. அங்கு சோதனை செய்த காவல்துறையினர் அங்கிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள விளாங்காடு கிராமத்தில் இருக்கின்ற இந்த நிறுவன அதிகாரியின் உறவினரான மணிகண்டன் என்பவருடைய வீட்டிலும், ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் இயங்கிவந்த சிலை அலுவலகத்திலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கு ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில் அதிக வட்டி தருவதாக எங்கள் நிறுவனம் சார்பாக அறிவிப்பு எதையும் நாங்கள் வெளியிடவில்லை. எங்கள் நிறுவனம் பெயரில் யாரோ இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் என்று கூறினார்கள். மேலும் சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, ஆருத்ரா நிறுவனத்தின் மீதும், துணை நிறுவனங்கள் மீதும் மோசடி, கூட்டுசதி உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிறுவனத்தின் இயக்குனரான மோகன்பாபு, உஷா, ஹரிஷ், ராஜசேகர், பாஸ்கர், செந்தில்குமார், மைக்கேல்ராஜ், பட்டாபிராமன் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 26 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்தது. அதிக வட்டி கொடுப்பதாக பொதுமக்களிடம் தவறான வாக்குறுதி கொடுத்து முதலீட்டு தொகையை வசூலித்தது தெரியவந்துள்ளது. 26 இடங்களில் மேற்கொண்ட சோதனையில் 6 லேப்டாப்கள், 44 செல்போன்கள், 60 பவுன் தங்கம், இரண்டு கார்கள், 48 கம்ப்யூட்டர் மென்பொருட்கள், ரூபாய் 3.41 கோடி பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட பணத்தை டெபாசிட் செய்த 11 வங்கிக் கணக்குகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் இயக்குனர்களான மோகன்பாபு, பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்கள் இந்த வழக்கை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும் @ [email protected] என்ற இணையதள முகவரி மூலம் புகார் மனுக்களை தெரிவிக்கலாம். பொதுமக்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் அதிலும் குறிப்பாக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியாகும் நிறுவனங்களின் விவரங்களைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |