போலீசார் நடத்திய சோதனையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 7,000 லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாராயணம்பாளையம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பிரபு மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அந்த லாரியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கொண்டுவரப்பட்ட 7,000 லிட்டர் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரி டிரைவர் முருகேசன் மற்றும் கலப்பட டீசல் உரிமையாளர் மோகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து கலப்பட டீசலுடன் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் லாரி உரிமையாளர்கள் இடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.