Categories
உலக செய்திகள்

அதிக விலைக்கொண்ட ரோலக்ஸ் கைக்கடிகாரம்.. பார்சல் பிரிக்கப்படாமலேயே மாயமான மர்மம்..!!

சுவிற்சர்லாந்தில் 8,000 பிராங்குகள் மதிப்புடைய ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை ஏலத்தில் எடுத்த நபருக்கு பார்சல் மட்டுமே கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சுவிற்சர்லாந்தில் உள்ள Graubundan என்ற மாகாணத்தில் வசிக்கும் ஒரு நபர், சுமார் 8,000 சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை இணையதளத்தின் மூலமாக ஏலத்தில் எடுத்துள்ளார். அந்த நிறுவனமும் அவருக்கு தபாலில் கைக்கடிகாரத்தை அனுப்பியிருக்கிறது. தபால் மூலமாக வந்த பார்சலை ஆவலாக திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் கைகடிகாரம் இல்லை. அதாவது மூன்று அடுக்குகளாக அழகாக பார்சல் செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அது கைக்கடிகாரம் மட்டும் இல்லை. அது மிகவும் சரியாக பார்சல் செய்யப்பட்டிருந்ததால் கைகடிகாரம் வரும் வழியில் கீழே விழுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மேலும் fraunfeldல் இருக்கும் ஒரு தபால் நிலையத்தில் தான் அந்த பார்சலை எடை போட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து untervaz என்ற இடத்தில் இருக்கும் தபால் நிலையத்திற்கு அந்த பார்சல் வந்தடைந்தபோது, மறுபடியும் எடை போட்டு பார்த்துள்ளனர். அப்போது துல்லியமாக கைக்கடிகாரத்தின் எடையான 120 கிராம் மட்டும் குறைந்திருக்கிறது. எனவே தபால் துறையில் பணியாற்றும் யாரோ ஒரு நபர் தான் பார்சலை பிரித்து கைக்கடிகாரத்தை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் நேர்த்தியாக பார்சல் செய்து வைத்திருக்கலாம் என்று அதன் உரிமையாளர் கூறுகிறார்.

ஆனால் தபால் துறை இதனை மறுத்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக மாகாண காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில் ஏல நிறுவனம், இது போன்ற சம்பவங்களை தவிர்க்க வேண்டுமென்றால் மக்கள் நேரிலேயே சென்று பொருட்களை காசு கொடுத்து வாங்கிச்செல்வது தான் சிறந்தது என்று ஆலோசனை கூறுகிறது. ஆனால் கைகடிகாரம் என்ன ஆனது? என்பதற்கு மட்டும் பதில் தெரியவில்லை.

Categories

Tech |