இந்த வருடம் முழுவதும் எச்1பி விசா வழங்கப்படாது என்ற அதிபரின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது
அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல் தங்கி பணிபுரிய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க அரசு எச்1பி விசா மூன்று ஆண்டுகள் கால கெடுவுடன் வழங்கி வந்தது. அதன் பிறகு தேவைப்பட்டால் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பதற்கான வசதியும் அதில் அடங்கியிருந்தது. இந்த எச்1பி விசாவை இந்தியர்களும் சீனர்களும் தான் அதிகமாக பெற்றிருந்தனர். குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த விசா மிகவும் முக்கியமான ஒன்று. இந்நிலையில் கொரோனா தொற்றினால் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பலர் வேலை இழக்க நேரிட்டது.
இதனால் அமெரிக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு பணிபுரிய வருபவர்களுக்கு கொடுக்கப்படும் எச்1 பி, எச்2 பி, எல், ஜே போன்ற விசாக்களை இந்த வருடத்தின் இறுதி வரை வழங்கப்படாது என்று நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார். இதனையடுத்து அமெரிக்காவில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் பல இந்த முடிவை எதிர்த்து நின்றன.
இந்த உத்தரவு பொருளாதாரத்திற்கும் வணிகர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் அமையும் என்று கூறி அமெரிக்காவை சேர்ந்த பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ட்ரம்புக்கு எதிராக கலிபோர்னியா மாகாணத்தின் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்த பிறகு விசா வழங்குவதை நிறுத்த போட்ட உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
நீதிபதி கூறுகையில், “குடியேற்றம் பற்றிய வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்ற கொள்கையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை முக்கியத்துவ படுத்துதல் போன்றவற்றில் உள்நாட்டுக் கொள்கை அமைக்க அதிபருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அது நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது என்பதை மிகவும் தெளிவாக அரசியலமைப்பு எடுத்துக் கூறுகிறது” எனக் குறிப்பிட்டார். நீதிபதியின் இந்த தீர்ப்பு பல இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக இருந்தது. இதனிடையே நாடாளுமன்றத்தில் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்.
அதனை உறுதி செய்யும் வகையில் சில நடைமுறைகளை எச்1பி விசா வழங்குவதில் மாற்றியமைக்க சட்ட மசோதா ஒன்று குடியரசு கட்சியின் எம்.பி மோ புரூக்ஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சட்ட மசோதா அமெரிக்கர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டு அதே வேலையை வெளிநாட்டவர்களுக்கு கொடுப்பதை தடுக்கும், அதோடு தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் வேலையில் அமர்த்தப்படுவார்கள் என்பதனை அனைத்து நிறுவனங்களும் உறுதி செய்வதற்கும் வலியுறுத்தும். இந்த சட்டம் நிறைவேறினால் h-1b விசா மூலம் அமெரிக்கா செல்பவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.