இலங்கையில் நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் ள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது.
இந்நிலையில் அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கண்டெடுக்கப்பட்ட பணம் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.