முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அச்சமயத்தில் எம்எல்ஏக்கள் விடுதி முன்பு ஏராளமான அதிமுகவினர் திரண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிமுக எம்எல்ஏ களும் 2000 தொண்டர்களும் கோவையில் எஸ் பி வேலுமணி வீட்டு முன்பு திரண்டு போலீஸ் சோதனைக்கு இடையூறு செய்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கோவை குனியமுத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனைக்கு இடையூறு செய்ததாக அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அரசு உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், தெரிந்தே நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.