அதிமுகவின் இரட்டை தலைமை எங்களுக்கு எப்போதும் பழகிப்போன ஒன்று தான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளூர் பிரச்சினையை மையமாக வைத்து தான் நடக்கிறது. திமுக அரசு கடந்த நான்கு மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பெருமையாக கூறி வருகிறது. ஆனால் அவர்கள் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக கருதப்படும் நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி விட்டது.
அதேபோல குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட்டவற்றில் சில கட்டுப்பாடுகளை விதித்ததால் 40 சதவீதம் பேர்தான் பயனடையும் நிலை உருவாகிவிட்டது. இப்படி நான்கு மாதங்களில் மக்கள் பெரும் ஏமாற்றத்தை தான் சந்தித்துள்ளனர். திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம்? என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு திமுக ஆட்சி மக்களுக்கு கடுமையான ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இது நிச்சயமாக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்துதான் அறிக்கைகள் கூறுகின்றனர். சட்டமன்றத்திலும் இணைந்துதான் பணியாற்றுகிறார்கள். எப்பொழுதுமே இரண்டு பேரும் ஒருமித்தக் கருத்துடன் உள்ளார்கள். இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன போன ஒன்றாக உள்ளது என்று பேசியுள்ளார் .