நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் சமூக சமத்துவ படை கூட்டணி தேர்தல் களம் காணவிருக்கிறது.இந்நிலையில் சமூக சமத்துவ படை கட்சியின் நிறுவனரும் ஓய்வு பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி சமூக சமத்துவ படை கட்சி சார்பில் சென்னை மாநகராட்சியின் 99 வது வார்டில் போட்டியிடுகிறார். இதுகுறித்து சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் கூறியதாவது, 99 வது வார்டில் எனக்கு நிறைய பேரை தெரியும் எனவே நான் எளிதில் வெற்றி பெற்று விடுவேன் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதிமுக சார்பில் எனக்கு மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
அதோடு மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சமூக சமத்துவப் படை கூட்டணி அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் அதற்காக நான் தீவிரமாக பிரச்சாரம் செய்வேன் எனக் கூறினார். ஐஏஎஸ் அதிகாரியான சிவகாமி வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். அதோடு தொழிலாளர் துறை கூடுதல் செயலாளர், சுற்றுலாத் துறை இயக்குநர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் என பல்வேறு உயர் பதவிகளையும் அலங்கரித்து உள்ளார். இவர் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகார வர்க்கம் தன்னை தீண்டத்தகாதவர் போல நடத்துகிறது என பேட்டி ஒன்றை அளித்திருந்தார் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.