தமிழகத்தில் அதிமுக வை உடைக்க ரஜினி என்ற மையப் புள்ளியை வைத்து பாஜக போட்ட சதித்திட்டம் படுதோல்வி ஆகிவிட்டது என கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அதிமுகவை உடைக்க ரஜினி என்ற மையப் புள்ளியின் அடிப்படையில் பாஜக சதித்திட்டம் தீட்டியது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துள்ளதால் பாஜகவின் சதித்திட்டம் தவிடுபொடியாகியுள்ளது என்று கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். ரஜினியின் முடிவால் தமிழக அரசியலில் வகுப்புவாத ராஜதந்திரம், பாஜகவிற்கு உயிர் கொடுக்க முடிந்த குரு மூர்த்திகளின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.