ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இதில் விசிக கட்சியானது தேர்தலில் மாவட்ட கவுன்சில் பதவிகளை மூன்றில் ஒரு பங்கை வென்று உள்ளது. ஆனால் எதிர் கட்சியிலுள்ள அதிமுகவானது இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.
இதனை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது,” கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஒன்றிய மாவட்ட குழு உறுப்பினர்களின் தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான இடங்களில் மக்களின் ஆதரவை பெற்று விசிக வெற்றிவாகை சூடியுள்ளது. ஒன்றிய குழு உறுப்பினருக்காக போட்டியிட்ட தொகுதிகளில் நான்கில் மூன்று பகுதிகளில் விசிக வெற்றியடைந்துள்ளது. மேலும் இந்த அற்புதமான வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும், எங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்ட திமுக மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து வென்றதை போலவே தற்பொழுதும் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். விசிகவின் மீது சாதியவாத, மதவாத மற்றும் பிற்போக்கு சக்திகள் அபாண்டமாக அவதூறான செய்திகளையும் பரப்பியுள்ள இந்த நிலையில் மக்கள் தங்களது பொன்னான வாக்குகளை அளித்து விசிகவை வெற்றி அடைய செய்துள்ளனர்” என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.