அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அலுவலகத்தின் பின்பக்க கதவு, முன் பக்க கதவு, முன் பக்கம் நுழைவாயில் கதவு ஆகியவற்றை இழுத்து மூடி சீல் வைத்தனர். போலீஸ் தடுப்புகளை அமைத்து அதிமுக தலைமை அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஈபிஎஸ் – ஒபிஎஸ் இருதரப்பினரும், அதிகாரிகள் முன்பு வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருவாய்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக, அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.