சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இன்று பொதுக்குழு நடப்பதற்கு முன்பு அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அதனால் அந்த பகுதியை கலவர பூமியாக காட்சியளித்தது. அந்த வழியாகச் சென்ற கார்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டது. ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.
இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் பலத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் வெளியேறினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளும் வருவாய்த்துறையினரால் பூட்டப்பட்டு அதிமுக அலுவலகத்திற்கு முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அதிமுக கட்சி அலுவலக முன்பு அமர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.