அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில் அதிமுக கட்சியின் அலுவலகம் உட்பட இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது வரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடிக்கு ஆதரவாகவே இருப்பதால் அவருடைய கையே ஓங்கி நிற்கிறது. இருப்பினும் அதிமுகவின் தலைமை யாருக்கு கிடைக்கும் என்பதை தேர்தல் ஆணையமும், நீதிமன்றம் தான் இறுதியில் முடிவு செய்யும்.
இந்நிலையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படத்துடன் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தை இணைத்து பேனர்கள் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிவரும் ஓ. பன்னீர்செல்வத்தின் படமும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறி வரும் சசிகலாவின் படமும் பேனர்களில் இடம்பெறவில்லை. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் தற்போது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.