சசிகலா தென்மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டதையடுத்து இன்று தன்னுடைய இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் பயன்படுத்திய காரில் அதிமுக கொடியோடு இன்று தஞ்சாவூர் செல்லும் சசிகலா டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து 28ஆம் தேதி மதுரை சென்று முத்துராமலிங்க தேவர் மற்றும் மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி அதிமுக ஆதரவாளர்களை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
29 ஆம் தேதி இராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்தித்த பிறகு மறுநாள் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தஞ்சாவூர் திரும்புகிறார். நவம்பர் 1ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய அரசியல் சுற்றுப்பயணம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.