தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக விற்கு 10% இடங்கள் கூட கிடைக்காமல் படுதோல்வியடைந்துள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளில் 138 பேர் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். அதிமுகவிற்கு இரண்டு தான் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் படுதோல்வி குறித்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 80% வெற்றி பெறும் என்று நான் முன்பே கூறினேன். அது தற்போது நடந்து விட்டது.
அதிமுகவின் தோல்வியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மாபெரும் இயக்கமாக இருந்த அதிமுக தற்போது தோல்வியையே சந்தித்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மீதான அதிருப்தி தான் அதிமுக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் என்றாலும் கூட அதிமுக சார்பாக வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லி நாம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் திமுகவினர் கொல்லைப்புறமாக வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை. அதிமுக நன்மை அடைய வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று பேசியுள்ளார்.