பாஜக மாவட்ட அலுவலகத்தில் நாயனார் நாகேந்திரன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார். நவம்பர் 24-ஆம் தேதியன்று திருப்பூருக்கு வந்த அவர் திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார். மேலும் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் சட்டமன்ற பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் என்ற பெயரை குறிப்பிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்று பொறிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் போது வெறும் 4 எம்எல்ஏக்கள் மட்டும் வைத்துக்கொண்டு பாஜக கல்வெட்டில் நயினார் நாகேந்திரனின் பெயரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.