கொள்கை வேறு பாஜகவுடன் கூட்டணி வேறு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏமாற்று வேலை என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி நாடகம் முடிவுக்கு வரும் என்றும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார் .
சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதிமுகவும், பாமகவும் ஆதரித்ததால் தான் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டது என்று கூறியுள்ள ஜவாஹிருல்லா, தமிழக உரிமைகளை பறிகொடுத்த எடப்பாடிபழனிசாமி கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு நாளுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாக கூறியுள்ள ஜவாஹிருல்லா, இடைப்பட்ட காலத்தில் எவ்வித முறைகேடுகளும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சட்ட பேரவைத் தேர்தலில் தமிழகம் சமூக நீதியின் தொட்டில் என்பதை விளக்கும் விதமாக தெளிவான தீர்ப்பை கொடுப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்