2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருப்பதால் விரைவில் ஜெயில் செல்ல வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கின்ற நிலையில் அதிமுக – திமுக குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை வைத்து மோதிக்கொள்ள ஆரம்பித்த்து விட்டன. 2ஜி ஊழல் குறித்து மாறி மாறி விமர்சனங்கள் வைத்து வரும் நிலையில் இன்று மீன்வளத் துறை அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 100% மதிப்பெண் எடுத்த ஆட்சி என்றால் அதிமுக அரசு, அம்மாவின் அரசு. திமுக ஆட்சியை பொருத்தவரை 35 மதிப்பெண்ணுக்கும் கீழ் உள்ளது.
பெயில் மார்க் எடுத்த ஆட்சியை மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள் ? அம்மாவின் அரசே தலை சிறந்து விளங்குவதால் ஒருவிரல் புரட்சி, அது இரு விரல் புரட்சி ஆக மாறி இரட்டை இலை என்பது மகத்தான வெற்றியை 2021ல் பெறும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பொருத்தவரையில் அவரது எண்ணமும் சரி, அவரது ஒரே குறிக்கோளும் சரி… தமிழ்நாட்டில் திமுக தலை தூக்க கூடாது என்பதற்காகவே கட்சி ஒன்றை ஆரம்பித்து, அதில் வெற்றி பெற்று, பத்து வருட காலம் சிறந்த ஆட்சியை நடத்தி, பொற்கால ஆட்சி என்று கூறுமளவிற்கு நடந்து கொண்டார்.
திமுகவைப் பொறுத்தவரையில் இருண்ட களப்பிரர் ஆட்சி. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தலைவர் MGRரின் ஆட்சி, தலைவரின் கொள்கை, தலைவர் லட்சியம் போன்றவற்றை கடைப்பிடிக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. தலைவரை கடன் வாங்கும் கட்சிகளில் வேறு தலைவர்கள் இல்லை என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள முடியும்.
ராஜா ஒரு வழக்கறிஞர். அவர் சட்டம் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கலாம். அவர் எப்படிபட்ட வக்கீலுனு எனக்கு தெரியாது. ஆனால் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இவரே தீர்ப்பு எழுதிய மாதிரி அவரின் கருத்து உள்ளது.
வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது, வழக்கின் முடிவு என்ன ? அதனை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போல, தவறு செய்தவன் ஜெயிலுக்கு செல்ல வேண்டும், தண்டனை பெற்றாக வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை என்றால் கூட பேசலாம். தற்போது மேல்முறையீட்டில் இருக்கும் வழக்கில் விரைவில் கம்பி எண்ணுகின்ற சூழலில் அவரே இன்று தீர்ப்பு எழுதியதை போல செய்தியாளர்களை அழைத்து, தான் நல்லவர் என்று பேசினால் ஏற்கக் கூடியதா ? என கேள்வி எழுப்பினார்.