அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றனர். அப்போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் பொதுக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் சென்னையில் வரும் 14ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஜெயின்ஸ் கல்லூரியில் பொதுக்குழுவை நடத்தலாம் என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் பள்ளி கல்லூரிகளில் ஜாதி, மத இயக்க செயல்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று கூறி இபிஎஸ் தரப்புக்கு உயர்கல்வித்துறை புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வரும் 11ம் தேதி பொதுக்குழு எங்கு நடைபெறும் என்ற குழப்பம் எழுந்துள்ளது. முன்னதாக தனது ஒப்புதல் இன்றி ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாகவும், இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் செல்லாது என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ பன்னீர்செல்வம் படம் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.