அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு வழக்கை நீதிபதி எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியம்மா சுந்தரம், விஜய் நாராயண், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் ஸ்ரீ ராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டிருந்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் 25ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உதவி ஆணையர் தலைமையில் 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீர்ப்பு வந்த பிறகு எந்த அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.