செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடனே இந்த அரசு டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை புரிந்து கொண்டு, 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்ட காரணத்தினாலே காவிரி தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமல்ல தற்போதைய பெரு மழையினால் தேங்கி இருக்கக்கூடிய நீர் படிவதற்கும் பேருதவியாக உள்ளது என்பதை இந்த பகுதி மக்கள்… குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.
மேலும் வேளாண்மையை ஊக்கப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்ட காரணத்தினால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 4.9 லட்சம் ஹெக்டர் பயிர் சாகுபடி நடைபெற்று நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. எந்த நிலையிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உழவர்களை கண்போல் காப்பாற்றக்கூடிய அரசு திமுக அரசு என்பதை நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே நன்றாக தெரியும்.
நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்திலேயே இந்த மாதம் 6, 7, 10, 11 ஆகிய நான்கு நாட்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. இதனை எதிர் நோக்கும் வகையில் கடந்த நான்கு மாதங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நம்முடைய அரசு எடுத்திருக்கிறது. இதன்படி சென்னையை பொருத்தவரை சொல்லவேண்டுமென்றால் 220 கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. இந்த பணிகளை நானே போய் நேரடியாக பார்த்தேன்.
கடந்த மாதம் 25ஆம் தேதி 28ஆம் தேதி நானே அந்த பணிகள் எல்லாம் பார்வையிட்டேன். மேலும் அடையாறு, கூவம் ஆறு, கேப்டன் காட்டன் கால்வாய், கோட்டேறி நந்தன் கால்வாய், பக்கிங்காம் எம்.ஜி.ஆர். கால்வாய், வேளச்சேரி ஏரி ஆகியவற்றில் இருக்கக்கூடிய ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் அதை எல்லாம் அகற்றி தூர்வாரப்பட்டு இருக்கிறது.
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரி ஆகியவற்றில் நீர் அளவு தொடர்ந்து கண்காணிப்பட்டது. தேவையான நேரங்களில் உபரி நீரை முறையாக வெளியேற்றி இருக்கிறோம். 2015 ஆண்டு அதிமுக ஆட்சி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்ட காரணத்தினாலே சென்னை எந்த அளவிற்கு சேதமடைந்தது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்று வரைக்கும் அதை சென்னை நகர மக்களும் மறந்திருக்க மாட்டார்கள். அத்தகைய அவலம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை துல்லியமாக கவனித்து சரியான நடவடிக்கையில் திமுக அரசு எடுத்தது.