முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்படி எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான வீடுகள் இருக்கும் வடவள்ளி, தொண்டாமுத்தூர், சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்படுகிறது.
இதேபோன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய 39 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
ஏற்கனவே எஸ்.பி வேலுமணி வீட்டில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது 3-வது முறையாக சோதனை நடத்துகின்றனர். இதேபோன்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே 1 முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக சோதனை நடத்தப்படுகிறது. மேலும் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் நடத்தப்படும் சோதனையின் போது என்னென்ன ஆவணங்கள் சிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.