அதிமுக கட்சியின் மூத்த தலைவர் அன்வர் ராஜா அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் அன்வர் ராஜா. இவர் ராமநாதபுரம் மாவட்ட சேர்ந்தவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் இவர் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பி என்ற பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக உள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய பொழுது சசிகலா பக்கம் இருந்தவர். பிறகு சசிகலா சிறைக்கு சென்ற பின்பு எடப்பாடியின் ஆதரவாளராக மாறினார். ஆனால் கூட்டணி கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சிப்பவர்.
ஓபிஎஸ், இபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும்கூட குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு, எம்பி பதவி கிடைக்காது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தற்போது அதிமுகவின் தலைமை மீது அவருக்கு அதிருப்தி இருந்தது. இதனை அவர் பலமுறை வெளிப்படையாக பேசுவார். கடந்த 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சி தலைமை வலுவாக இல்லை என்றும், அதனால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். இதனால் சிவி சண்முகம் அவரை அடிக்க முற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜாவை அதிமுக கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்ட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா, இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அன்வர் ராஜாவை திமுகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலமாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.