நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சுயேச்சைகள் விறுவிறுப்பாகவும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். குமரி மாவட்டத்திற்கு உண்டான தனிச்சிறப்பாக அவர்கள் வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்து வருவது மக்களிடையே நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் விறுவிறுப்பாக மனுத்தாக்கல் நடைபெற்றது.
ஜக்கம்பட்டியில் பகுதியில் இருந்து திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தப்பாட்டம், தேர் ஆட்டத்துடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். அங்குள்ள 16 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், இரண்டு வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு தாக்கல் செய்தனர். நாகை மாவட்டத்தில் விஜய் மக்கள் மன்றத்தினர் குத்தாட்டம் போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 4 வார்டுகளுக்கு விஜய் மக்கள் மன்றத்தினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக வந்தவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு கூத்தாட்டம் போட்டனர். அப்போது போலீசாருக்கும், விஜய் மக்கள் மன்றத்தில் இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைக்கிளை வலம் வந்து மனு தாக்கல் செய்தார். செய்யாறு நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் என்பவர் உடல் ஆரோக்கியத்தை காப்பது குறித்து சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜா என்பவர் எம்ஜிஆர் வேடமணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 50 வது வார்டில் சிம்மக்கல் பகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் அனிதா என்ற இளம்பெண் 4 மாத கைக்குழந்தையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அமமுக சார்பில் 68-வது வார்டில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பழைய ஐந்து ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிந்து வந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட எண்ணூர் பகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கவுஸ் சுபாஷா என்பவர் ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து மாலையாக அணிந்து வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கானல் நீராய் போன காகித பட்ஜெட் என்ற வாசகத்தை கையில் ஏந்தி வந்த அவர் மனு தாக்கல் செய்தார். வேட்புமனுவை திரும்பபெற திங்கட்கிழமை கடைசி நாளாகும். வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது, வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடக்கிறது.