தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்து விட்டு பாரதிய ஜனதா வளர நினைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பொன்னையன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றதில் அதிமுக மூத்த தலைவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான பொன்னையன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணி கட்சி தான் என்றாலும், அந்தக் கட்சி தமிழ்நாட்டில் வளர்வது அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளும், தமிழ் தமிழ் நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்று கூறினார். தமிழ்நாட்டில் உரிமைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டிய பொன்னையன், காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக பாஜக இரட்டை வேடம் போடுவதாக கூறினார்.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கொடுக்கக்கூடாது என்று கர்நாடக பாஜக அரசு போராடும் நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தில் வாய்மூடி மவுனம் காப்பதாக அவர் குறிப்பிட்டார். இதனையெல்லாம் அதிமுகவினர் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதிமுகவை அழித்து ஒழித்து விட்டு தமிழ்நாட்டில் பாஜக வாழ நினைக்கிறது என்று குற்றம் சாட்டிய பொன்னையன், அதிமுகவினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த முகாமில் எஸ் பி வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் விஜயபாஸ்கர், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கினர். பொன்னையனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜகவின் விபி துரைசாமியும் இதற்க்கு பதிலடி கொடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திம் செய்தியாளர்களிடம் கூறிய போது, பொன்னையன் பேசியது அவரின் சொந்த கருத்து என கூறி இந்த பரபரப்பு விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.