கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அரசு ஆண்கள் பள்ளி, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 5 பெட்டி கடைகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் 5 கடைகளுக்கும் தலா 200 ரூபாய் அபராதம் விதித்து, புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்று மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.