நாடு முழுவதும் 26 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதம் 1,096 மருந்துகளை ஆய்வு செய்ததில் 26 மருந்துகள் தரமற்றவை என தெரியவந்துள்ளது. காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தும் 26 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளின் விவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் இமாச்சளப் பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.