போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) அன்று இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருடந்தோறும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டம் காப்சிகோப்ரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்தான் மருத்துவர்களின் அலட்சியம் பற்றி தெரியவந்துள்ளது. அங்குள்ள ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்து பதிலாக சானிடைசரை குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது பணியில் ஒரு மருத்துவர், ஒரு அங்கன்வாடி ஊழியர், ஒரு ஆஷா ஊழியர் என்று மூன்று பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அலட்சியம் காட்டிய இந்த மூன்று பேரும் இடைநீக்கம் செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.