ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் விஜயபாஸ்கர் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர்.. இவர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரிடமிருந்து பல லட்சம் ரூபாய் முதலீடு பெற்று ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பணத்தினை கட்டி முகவராக செயல்பட்டு வந்துள்ளார்.. இந்நிலையில் 1600 கோடி அளவுக்கு பண மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், முதலீடு பெற்றுவந்த மக்கள் அவ்வப் போது விஜய் பாஸ்கர் வீட்டுக்கு வந்து பணம் கேட்டுமிரட்டியதாகவும், அவரிடம் பணம் கேட்டு வருந்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் 1ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், இன்று பிற்பகல் விஜயபாஸ்கர் பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் பாலுசெட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு செய்த போலீசார், இறப்பு குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விஜயபாஸ்கர் இந்த முடிவு எடுத்துள்ளது அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.