கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியாற்று முகம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வாடகை வீட்டில் தங்கி இருந்து தள்ளுவண்டியில் கூழ், மோர் மற்றும் பலகாரம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் பிரகாஷ் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த கார் தள்ளுவண்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ், கூழ் குடித்து கொண்டிருந்த ரெனால்ட் ஜெபா மற்றும் காரில் வந்தவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக ரெனால்ட் ஜெபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நம்பர் பிளேட் இல்லாத காரை 17 வயது சிறுவன் அதிவேகமாகவும், அஜாக்கிரதியாகவும் ஓட்டி வந்ததாக தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் காரில் வந்தவர்கள் காரை ஓட்டியது வினித்(25) என தெரிவித்துள்ளனர். எனவே உண்மையை கண்டறிவதற்காக போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.