மாட்டு வண்டி மீது கார் மோதிய விபத்தில் மாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாட்டு வண்டியில் திருமூர்த்தி மலைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து சதீஷ்குமார் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் காளியப்பகவுண்டன் புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் மாட்டு வண்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மற்றொரு மாட்டிற்கு பலமாக அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த சதீஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான மணிக்குமார் என்பவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அச்சத்தில் அங்கிருந்து ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த மாட்டை பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காயமடைந்த மாட்டையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.