தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தன்னிச்சையாக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதனால் இந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களும் உழவர்களுக்கு எதிரானதுதான். இந்த நாட்டில் இருந்து விவசாயிகள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். வியர்வை சிந்தி உழைக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை என்று தெரிவித்தார்.
அப்போது இது குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில், “நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலைமை” என்று தெரிவித்தார். இந்நிலையில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறிது நேரத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம், சட்டப்பேரவையில் நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு என்று கூறினீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், “ரகசியம், பரம ரகசியம்….” என்று கூறிவிட்டு காரில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.