பழங்காலத்தில் ஆட்சி செய்த நாயக்கர் கால கல்வெட்டு தஞ்சாவூரில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெயேந்திர சரஸ்வதி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை சீர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது அந்தக் கட்டடத்திற்கு கீழ் ஒரு கல்வெட்டு புதைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து உடனடியாக அந்தப் பள்ளியின் நிர்வாக பொறுப்பாளர் பஞ்சாபிகேசன் என்பவர் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதர், தொல்லியல் ஆய்வாளர் மணிமாறன், தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், மற்றும் ஆசிரியர் ஜெயலட்சுமி ஆகியோர் இந்த கல்வெட்டை ஆய்வு செய்துள்ளனர்.
அந்த ஆய்வில் இந்தக் கல்வெட்டானது கி.பி 1,535 ம்ஆண்டு முதல் கி.பி 1, 675ம் ஆண்டு வரையிலான 140 ஆண்டுகள் பழமையானது என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த கல்வெட்டு தஞ்சையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தை சேர்ந்ததாகும். இந்நிலையில் 3 1/2 அடி உயரமும் 1 1/4அடி அகலமும் உள்ள இந்த கல்வெட்டில் 15 வரிகள் எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கல்வெட்டில் நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டிய கோவில்கள், பழுதடைந்த கோவில்களை சீரமைத்தல், கோவில்களுக்கு கொடை வழங்குதல் போன்ற குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. மேலும் இந்த கல்வெட்டில் சங்கு ,சக்கரம் போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு, மாதம், தானம் அளித்தவர் பெயர் போன்ற எந்த குறிப்புகளும் எழுதப்படவில்லை எனவும் ஆய்வளார்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டில் முக்கியமாக எழுதப்பட்டது என்னவென்றால் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நந்தவனம், பூந்தோட்டம் போன்ற சொத்துக்களுக்கு விரோதமாக யாராவது செயல்பட்டால் அவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்று எழுதப்பட்டு உள்ளதாக ஆய்வளார்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள நரசிங்கபெருமாள் கோவிலின் மதில் சுவரில் சோழர் காலத்தை சேர்ந்த ஒரு துண்டு கல்வெட்டு இன்றளவும் காணப்படுகிறது எனவும், அப்போதயை காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த கல்வெட்டானது புதைந்து மண்ணுக்கு அடியில் போயிருக்கலாம் என்றும் தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.