மயிலாடுதுறையில் கணவன்-மனைவி உட்பட 3 பேரை சரமாரியாக தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு வடக்கு தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திநாதன் மற்றும் அவரைச் சார்ந்த 4 பேர் தமயந்தி வீட்டின் எதிரே குடி போதையில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவா, தமயந்தி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அதில் ஆத்திரமடைந்த கார்த்திநாதன் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சிவா, தமயந்தி மற்றும் அவர்களின் உறவினரை இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதில் தமயந்தி, அவருடைய கணவர் சிவா மற்றும் உறவினர் அறிவழகன் ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தமயந்தி மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் கார்த்திநாதனின் ஆதரவாளர் சுந்தரபாண்டியன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் ஆனந்தராஜ், கார்த்திநாதன், ஆகாஷ் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.