சட்ட விரோதமாக முயல்களை வேட்டையாடிய குற்றத்திற்காக 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிவகாமிபுரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் சுற்றித்திரிந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சூறாவளி ஓடை என்ற இடத்தில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டார்ச்லைட் வெளிச்சத்துடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் பகுதியில் வசிக்கும் சபரி ராஜா, குமார் மற்றும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் முயல்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதோடு, அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் வேட்டையாடிய முயல்கள், டார்ச்லைட், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.