தி.மு.க பிரமுகர் தனது மனைவி மற்றும் மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ அலங்கம் மல்லனப்பா சந்து பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க 15-வது வார்டு பிரதிநிதி ஆவார். இந்நிலையில் ராஜமாணிக்கம் தனது மனைவி மற்றும் மகளுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் காவல்துறையினர் உங்களது கோரிக்கையை மனுவாக அளியுங்கள் எனவும், தர்ணாவில் ஈடுபட்ட இங்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் ராஜமாணிக்கம் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 43 ஆண்டுகளாக மாநகராட்சி 15-வது வார்டில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். அந்த வார்டு முகவரியில் எனக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் எனது அனுமதியின்றி இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியலில் இருந்து மறைமுகமாக எனது பெயரை நீக்கம் செய்துள்ளார். நான் தற்போது வேறு முகவரியில் வசிப்பதாக காரணம் கூறி எனது பெயரை மட்டும் நீக்கியுள்ளார். எனவே என்னிடம் இதுகுறித்து கேட்காமல் பெயரை நீக்கம் செய்த மாநகராட்சி ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து இந்த தேர்தலில் நான் கண்டிப்பாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.