ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மக்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் நன்றி தெரிவித்துள்ளார்..
கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்று மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. அதாவது, மீட்பு படை வீரர்கள், ராணுவத்தினர் வருவதற்கு முன்பாகவே மக்கள் அங்கு சென்று உதவியுள்ளனர்..
மேலும் தலைநகர் சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மீட்பு பணி, வேண்டிய உதவியை உடனடியாக செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.. எனினும் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் தான் 13 பேரின் உடல்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.. இதனை அடுத்து தான் அவர்களது உடல் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டது.. இந்நிலையில் அதே மைதானத்தில் மீட்பு பணியில் திறம்பட செயல்பட்ட அரசுத்துறை மற்றும் உதவிய மக்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது..
அப்போது பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அருண், விபத்து நடந்த 10ஆவது நிமிடத்தில் விரைந்து வந்து மக்கள் உதவிசெய்தனர். விபத்து நடந்த பகுதியில் வசித்த மக்கள் நெருப்பை அனைத்து மீட்பு பணிக்கு பெரிதும் உதவினர்.. ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணியின் போது அனைவரும் உதவினர், உதவாதவர்கள் யாருமில்லை.. அத்தனை பேரும் உதவினர்.
இப்படிப்பட்ட குடிமக்கள் இருந்தால் இதே ராணுவ உடை அணிந்து 5,000 முறை கூட பணியாற்றுவோம். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மக்களுக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பேசினார்..
மேலும் விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கி லெப்டினண்ட் ஜெனரல் அருண் கவுரவபடுத்தினார்.. தீயணைப்பு, காவல்துறை, வனத் துறை அதிகாரிகளையும் அழைத்து அவர்களுக்கு சால்வை போர்த்தி, பரிசு வழங்கினார்.. அதேபோல அந்த கிராமப்பகுதிக்கும் அவர் செல்ல இருக்கிறார்.. அங்குள்ள மக்களுக்கும் சென்று நன்றி தெரிவித்திருக்கிறார்..