அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அமைச்சர்கள் உடனிருந்தனர். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 37.80 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரத்திற்குள் அரசு ஊழியர்களுக்கு தடுப்புஊசி செலுத்தப்படும். பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இதற்க்கு மத்தியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைப்பதாக அல்லது தேவையான முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதா என்பதை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்தும் எடுத்த முக்கிய முடிவுகள் குறித்தும் சில நாட்களில் அதிகாரபூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், முக கவசம் அணிந்து வருவது கட்டாயம் என்றும் அவர் கூறினார்.