நாட்டில் தரமான மருந்துகள் அனைத்து மட்டங்களிலும் கட்டுப்படியான விலையில் கிடைப்பதை அத்தியாவசிய மருந்துகளின் தேசியபட்டியல் உறுதிசெய்கிறது. இப்பட்டியல் சென்ற 1996 ஆம் வருடம் முதல் முறையாக வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2003, 2011 மற்றும் 2015 போன்ற வருடங்களில் திருத்தம் செய்யப்பட்டது. இப்போது 4-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருத்தப்பட்ட இந்த புது தேசியப் பட்டியலை மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில் “பிரதமர் மோடியின் அனைவருக்கும் மலிவான விலையில் மருந்து என்ற தொலை நோக்கு பார்வையின் அடிப்படையில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இது வகைசெய்கிறது” என அவர் கூறினார். அத்துடன் செயல் திறன், முன்னுரிமை, தரம், விலை போன்றவற்றின் அடிப்படையில் அத்தியாவசியமான மருந்துகள் வகைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த அம்சங்களின் அடிப்படையில் மருந்துகள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே தேசியப் பட்டியலின் நோக்கமாகும்.
இப்பட்டியலில் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளது. அவை 27 சிகிச்சைபிரிவுகளுக்கு என வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. முந்தைய பட்டியலிலிருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் 4 புற்றுநோய் சிகிச்சை மருந்துகள், சில தடுப்பூசிகள் என புதியதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார், சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.