வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மீன் பிடிக்க தடுக்கும் அரசு உப்பு நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் ஊராட்சியில் மேலமுந்தல், மடத்தாகுளம், கிருஷ்ணாபுரம், வேலாயுதபுரம், காந்தி நகர் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் மீன் பிடித்து வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு திடீரென தடை விதிக்கும் அரசு உப்பு நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். மேலும் வருகின்ற 14ஆம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறிகையில், வருவாய் துறையினரிடம் இருந்து வாலிநோக்கம் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் குத்தைகைக்கு எடுத்து உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்காக கடல்நீரை பாத்திகளில் பாய்ச்சி உப்பு தயாரிக்கின்றனர். இதனையடுத்து கடலில் இருந்து வருகின்ற நீர் தேங்கும் இடங்களில் மீன்கள் வளர்கின்றது. அதனை வருடத்திற்கு ஒருமுறை அரசால் டெண்டர் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசால் டெண்டர் விடப்படாத பகுதிகளான மாரியூர் ஊராட்சியில் உள்ள குட்டைகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மீன் பிடித்து வருகின்றனர். அப்படி மீன் பிடித்து வருபவர்களை தமிழ்நாடு அரசு நிறுவன அதிகாரிகள் மற்றும் டெண்டர் எடுத்த நபர்கள் தடை விதிக்கின்றனர். எனவே இந்த நடவடிக்கையை கண்டித்து வருகின்ற 14ஆம் தேதி மாரியூர் ஊராட்சிக்குட்பட்ட மக்கள் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.