நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை தாண்டி சென்ற மெட்ரோ ரயிலை திமிங்கலத்தின் வால் சிற்பம் தாங்கி பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்ரடாம் மாகாணத்தின் பிஜ்ஹென்ஸி நகரில் டி ஆகார் என்ற பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அது நகரின் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பயணத்தின் இறுதி நிறுத்தமாக அமைந்துள்ளது. நீர்ப் பரப்புக்கு மேலே அமைந்திருக்கின்ற அந்த மெட்ரோ நிலையத்தில் இருக்கின்ற ரயில் பாதையின் முடிவில் திமிங்கலத்தின் வால் போன்ற இரண்டு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அது பிளாஸ்டிக்கால் கடந்த 2002ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அப்பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வழக்கம்போல பயணம் முடிவடையும் பகுதிக்கு மெட்ரோ ரயில் ஒன்று வந்துள்ளது. அதில் பயணிகள் யாரும் இல்லாததால், ஓட்டுநர் வழக்கத்தை விட வேகமாக வந்துள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மெட்ரோ ரயில் தண்டவாளத்தை தாண்டி சென்று நீருக்குள் விழுந்து விடும் அபாயம் ஏற்பட்டது. அப்போது வியப்பூட்டும் வகையில் தண்டவாளத்தை தாண்டி சென்ற மெட்ரோ ரயில் அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார திமிங்கலத்தின் வால் மீது மோதி அந்தரத்தில் நின்றது.
பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டிருந்த அந்த திமிங்கல வால் மெட்ரோ ரயில் பெட்டிகளை தாங்கிப் பிடித்த அந்தரத்தில் அசராமல் நின்று காட்சி அளித்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற ரயில் நிலைய அதிகாரிகள் ஓட்டுநரை சிறிய காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகே மெட்ரோ ரயிலை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வியப்பூட்டும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.