தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் தீபாவளியை தீபத்திருநாளாகவும், தமிழகத்தில் கார்த்திகை திருநாள் தான் தீபத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முந்தைய காலத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளிக்கும் இன்று கொண்டாடப்படும் தீபாவளிக்கும் இருக்கும் வித்தியாசத்தை பார்ப்போம்.
அந்த கால தீபாவளி:
ஏழை பணக்கார வித்தியாசம் இன்றி அவரவர் வசதிக்கு ஏற்ப துணி எடுத்து தையல் செய்த புத்தாடைகளை அணிந்துதான் தீபாவளி கொண்டாடினர். இதனை அடுத்து முறுக்கு, அதிரசம் தயாரித்து சொந்தங்களுக்கு கொடுத்து மகிழ்வர். தீபாவளி அன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து சுவாமிக்கு பலகாரங்களை வைத்து கும்பிடுவர். இதனை அடுத்து பெரியோர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவர். ஒவ்வொரு ஆண்டும் வாழ்த்து அட்டைகளை சேமித்து வைப்பவர்களும் உண்டு.
இந்த கால தீபாவளி:
தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் ஆயத்த ஆடைகளில் தொடங்கி, கடைகளில் பலகாரம் வாட்ஸ் அப்பில் வாழ்த்து, உறவினர்களுடன் அரட்டை என தீபாவளியை கொண்டாடுகின்றனர். தீபாவளிக்கு தேவையானவற்றை இணைய தளத்திலேயே வாங்கி விடுகின்றனர். வேறு இடத்தில் பணிபுரிபவர்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்து தீபாவளியை கொண்டாடுகின்றனர். இந்த காலத்தில் நவீன வீட்டு உபயோக சாதனங்கள் முதல் அனைத்திற்கும் தீபாவளிக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்தந்த காலத்திற்கு ஏற்றபடி மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.