திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு வேலை பார்க்கும் நர்ஸ் ஒருவர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகிறார். மேலும் விரைந்து முதலுதவி சிகிச்சை அளிக்காமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமலும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நர்ஸை இடமாற்றம் செய்வதாக டாக்டர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து பணியாளர்கள் கூறியதாவது, இந்த மருத்துவமனையில் 5 டாக்டர்கள் வேலை பார்க்க வேண்டும். ஆனால் தற்போது மூன்று டாக்டர்கள் மட்டுமே இருக்கின்றனர். மேலும் ஒரு ஆண் ஒரு பெண் செவிலியர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் கூட பணிகள் தாமதமாக நடைபெறலாம் என கூறியுள்ளனர்.