‘மைதான்’ படத்திற்காக போடப்பட்ட செட் ‘டவ்தே’ புயலால் சேதமடைந்துள்ளதால் தயாரிப்பாளர் போனி கபூர் வருத்தத்தில் உள்ளார்.
பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் அமித் ரவீந்திரநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மைதான். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு இந்த படத்திற்காக பல கோடி செலவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. ஆறு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டதால் மைதான் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட் சேதமடைந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் கோடிக்கணக்கில் செலவு செய்து மீண்டும் செட் அமைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அடித்த ‘டவ்தே’ புயலால் அந்த செட் முழுவதுமாக சேதமடைந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் ‘மைதான்’ படத்தை நினைத்து பார்த்தாலே அழுகையாக வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் ‘இந்த படத்தை எப்படி முடிக்கப் போகிறேன் என தெரியவில்லை. நான் எதிர்பார்த்ததைவிட பட்ஜெட் செலவு அதிகரித்துக் கொண்டே போவதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதை நினைத்து பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இதில் ஆறுதல் தரும் விஷயம் இந்த செட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது தான். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக பிரிக்கப்பட்ட அதே பொருட்களை மீண்டும் செட் போட பயன்படுத்தினோம். ஆனால் தற்போது புயலால் அனைத்தும் நாசமாகி விட்டதால் மீண்டும் புதிய செட் போட வேண்டும். இதற்கு கோடிக்கணக்கில் செலவாகும்’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.