ஓடும் பேருந்தில் 52 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் விவசாயியான சாங் தப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரிதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் பெங்களூருவில் இருக்கும் தனது மகளை பார்த்துவிட்டு கர்நாடக அரசு பேருந்தில் ஏறி ஓசூருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பிறகு தாங்கள் வைத்திருந்த கைப்பை திறந்து கிடப்பதை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கைப்பையில் 52 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது.
இந்நிலையில் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பேருந்தில் ஒன்றாக பயணம் செய்த 2 பெண்கள் திருடிச் சென்றதாக தம்பதியினர் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பேருந்தில் இருந்து இறங்கி 2 பெண்கள் சாலையின் குறுக்கே சென்று மீண்டும் அதே பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.