தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி நேற்று சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் நுபுர் சர்மா, அதிமுக உட்கட்சி பூசல் உட்பட பல விவகாரங்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய கே.எஸ்.அழகிரி, “முகமது நபியை (இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர்) பற்றி அம்மதத்தை சாராத ஒருவர் விமர்சிக்கலாமா..? அவ்வாறு விமர்சித்தால் கலவரம் தான் வரும். மேலும் மக்களுக்கு கருத்து வேறுபாடு வரும். அத்துடன் அப்படி விமர்சித்தால் மக்கள் இரண்டாக பிளவுபட்டுதானே நிற்பார்கள்.
அது தான் அவர்களின் (பாஜக) நோக்கம் ஆகும். அதுமட்டுமல்லாமல் ஒரு குஜராத் கலவரத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் (பாஜக) நோக்கம் ஆகும். அ.தி.மு.க, பா.ஜ.க-வின் அடிமை கட்சியாக மாறி விட்டது. நாங்கள் அதனை கூறியபோது நீங்கள் அரசியலுக்காக கூறுகிறீர்கள் என்றார்கள். எனினும் பிரதம மந்திரி கூறியதால் தான் நான் துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டேனே தவிர, இல்லையெனில் பதவியை ஏற்றிருக்க மாட்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கூறியுள்ளார்” என்று பேசினார்.