மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான பந்தத்தை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சமீபத்தில் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மதத்தை கடந்து அனைத்து சமுதாய மக்களும் ஒன்று திரண்டு வந்து அந்த யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் நாய், பூனை, கிளி, ஆடு, மாடுகளை தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல பாவித்து வருகின்றார்கள்.
அதுபோல அழையாவிருந்தாளியாக வீட்டிற்கு வரும் குரங்குகளுக்கு உணவு, பழங்கள் வழங்குவதும் கூட நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது பள்ளிக்கு அழையா விருந்தாளியாக வந்த குரங்கிற்கு தலைமை ஆசிரியர் ஒருவர் உணவு ஊட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் ஜப்பல கூட்டா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் உயர் தொடக்க பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு கர்நாடக அரசு சார்பாக மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவ, மாணவிகள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு குரங்கு ஒன்று புகுந்தது.
இதனை கவனித்த பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் அந்த குரங்கிற்கு ஒரு தட்டில் சோறு வைத்து சாப்பிட கொடுத்துள்ளார். ஆனால் அதனை அந்த குரங்கு சாப்பிட மறுத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த தலைமை ஆசிரியரே சோற்றை பிசைந்து ஒரு குழந்தைக்கு தாய் ஊட்டி விடுவது போல குரங்கிற்கு சாப்பாடு ஊட்டி உள்ளார். அப்போது அந்த குரங்கு அந்த சாப்பாட்டை சாப்பிட தொடங்கியுள்ளது. அதன் பின் அந்த குரங்கு எந்த இடையூறும் செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டது. குரங்கிற்கு தலைமை ஆசிரியர் ஒருவர் சாப்பாடு ஊட்டிய காட்சியை சக ஆசிரியர் ஒருவர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் குரங்கிற்கு சாப்பாடு கொடுத்த அந்த தலைமை ஆசிரியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.