இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் கண்டிப்பாக நாங்கள் வெல்வோம் என்று ஜிம்பாப்வே வீரர் கையா உறுதியாக கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி இன்று இந்திய நேரப்படி மதியம் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது. இந்த 3 போட்டிகளுமே அந்நாட்டிலுள்ள ஹராரே நகரில் தான் நடைபெற உள்ளது.. முதன்மை வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஆசிய கோப்பையை வெல்வதற்கு தயாராகி வருகிறது. இதன் காரணமாக கே. எல் ராகுல் தலைமையில் இளம் படைகளை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.
எனவே இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி எப்படி இந்த தொடரில் செயல்பட போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடர் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்ற நிலையில், ஜிம்பாப்வே அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் இன்னொசென்ட் கையா என்பவர் கருத்தினை கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசுகையில், இந்திய அணிக்கு எதிராக நாங்கள் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றுவோம் என நம்புகிறேன்.. நான் இந்த தொடரில் தனிப்பட்ட முறையில் சதம் அடிக்க விரும்புகிறேன். இந்த தொடரில் நான் சதம் அடிப்பது மட்டும் இல்லாமல் அதிக ரன்களையும் குவிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எனவே அதை எனது இலக்காக கொண்டு இந்த தொடரில் விளையாட உள்ளேன் என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் எங்கள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இருப்பது எங்களுக்கு ஒரு சாதகமான விஷயம். இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இல்லை என்றாலும் கூட தற்போது இருக்கும் இந்திய அணி வலுவாக தான் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இருப்பதால் அவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவே மாட்டோம். ஆனாலும் கண்டிப்பாக இந்த தொடரில் நாங்கள் வெல்வோம் என்று உறுதியாக கூறியுள்ளார்.
ஜிம்பாப்வே அணி தனது சொந்த மண்ணில் சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசத்துக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி 2 கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.